மல்பெரியில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்
வேரமுகல் பெருவாரியாக பரவும் தொற்று நோய் என்பதால் செடிகளை முற்றிலுமாக அழித்துவிடும் திறன் கொண்டது. ஆதலால் இந்நோய் மல்பெரி சாகுபடியில் பெரிய தடையாக இருக்கிறது. பருவ மழைக்கு முந்தைய மழை மற்றும் இடைப்பட்ட நீண்ட வறண்ட வானிலை நிலவுவதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் மல்பெரியில் இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, மல்பெரியில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்: மணற்பாங்கான பகுதிகளிலும், மானாவரியாக மல்பெரி சாகுபடி செய்யப்படும் இடங்களிலும், எரு மற்றும் தொழுவுரம் அதிகமாக இடாத தோட்டங்களிலும், நீர்ப் பாசன வசதியற்ற தோட்டங்களிலும் வேரமுகல் நோயின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்றது. மேலும், இந்நோய் பாதித்த செடி மற்றும் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்து தீயிடாது அப்படியே விட்டுவிடுவதால் நீர்ப்பாசனம் மற்றும் இடை உழவு செய்யும் பொழுது இக்கிருமிகள் நீர் மற்றும் மண் மூலமாக பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற ஆரோக்கியமான செடிகளுக்கும் பரவி பாதிப்பை உண்டாக்குகிறது. நோயின் அறிகுறிகள் : இந்த நோயின் ஆரம...