மல்பெரியில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்

 

வேரமுகல் பெருவாரியாக பரவும் தொற்று நோய் என்பதால் செடிகளை முற்றிலுமாக அழித்துவிடும் திறன் கொண்டது. ஆதலால் இந்நோய் மல்பெரி சாகுபடியில் பெரிய தடையாக இருக்கிறது. பருவ மழைக்கு முந்தைய மழை மற்றும் இடைப்பட்ட நீண்ட வறண்ட வானிலை நிலவுவதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் மல்பெரியில் இந்நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே, மல்பெரியில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்:
  • மணற்பாங்கான பகுதிகளிலும், மானாவரியாக மல்பெரி சாகுபடி செய்யப்படும் இடங்களிலும், எரு மற்றும் தொழுவுரம் அதிகமாக இடாத தோட்டங்களிலும், நீர்ப் பாசன வசதியற்ற தோட்டங்களிலும் வேரமுகல் நோயின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்றது. மேலும், இந்நோய் பாதித்த செடி மற்றும் வேர்ப்பகுதியை வெட்டி எடுத்து தீயிடாது அப்படியே விட்டுவிடுவதால் நீர்ப்பாசனம் மற்றும் இடை உழவு செய்யும் பொழுது இக்கிருமிகள் நீர் மற்றும் மண் மூலமாக பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற ஆரோக்கியமான செடிகளுக்கும் பரவி பாதிப்பை உண்டாக்குகிறது.
நோயின் அறிகுறிகள் :
  1. இந்த நோயின் ஆரம்பத்தில் மல்பெரி இலைகள் வாடி, மஞ்சள் நிறமாகி, உதிர்வதும் அதனைத் தொடர்ந்து கிளைகள் அனைத்தும் திடீரென வாடி வலுவிழந்து பக்கவாட்டில் தொங்க ஆரம்பிக்கும். 
  2. பாதிக்கப்பட்ட மல்பெரி செடியின் வேர்ப்பகுதி முற்றிலும் அழுகி விடுவதால் இந்த செடியினை எளிதாக கையினாலேயே பிடுங்க முடியும். செடியின் வேர்ப்பகுதி பாதிக்கப்பட்டு பழுப்பு நிறமாகவும், பின்னர் கருப்பு நிறமாகவும் மாறி திசுக்கள் பலவீனமடைந்து செடிகள் காய்ந்து விடும்.

ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை நடைமுறைகள்
1. வேதியியல் முறை
  • மல்பெரித்தோட்டங்களில் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் அத்தகைய மல்பெரி செடிகளை 30 செ.மீ. உயரத்தில், கவாத்து செய்து பாதிக்கப்பட்ட மல்பெரி செடியை சுற்றி 20-30 செ.மீ. வட்டபாத்தி எடுத்து. 0.5% ராட்-பிக்ஸ் மருந்து கரைசலை (5 கிராம் / ஒரு லிட்டர் தண்ணீர்) தண்டுகள் அனைத்தும் நனையுமாறு ஊற்றி, மண்ணைக் கொண்டு மூடி மிதமாக கையால் அழுத்திவிட வேண்டும்.
2. உழவியல் முறை
  • வேர் அழுகல் நோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலங்களை கோடை காலங்களில் ஆழமாக (30 செ.மீ) உழுவதனால் மண்ணிற்கு அடியில் உள்ள நோய் கிருமிகள் ஆரிய ஒளிபட்டு அழிவதற்கு வழிவகுக்கும்.
  • நோய் இல்லாத தோட்டங்களில் நாற்றங்கால் அமைத்து நாற்று உற்பத்தி செய்ய வேண்டும். இதனால், நாற்றங்காலிலிருந்து நடவு வயலுக்கு நோய் பரவுவதைத் தவிர்க்கலாம்.
  • முழுவதும் காய்ந்த மல்பெரி செடிகளை பிடுங்கி எரித்துவிட வேண்டும்.
  • மல்பெரித் தோட்டத்திற்கு தேவையான அங்கக உரம் அல்லது எருவினை இட்டு மண்ணின் அங்கக் கரிம அளவினை அதிகரிக்க வேண்டும்.
  • வேப்பம் புண்ணாக்கு 800 கிலோ / ஏக்கர் / வருடம் என்ற அளவில் இரண்டு தவணைகளில் பிரித்து அனைத்து செடிகளுக்கும் இட வேண்டும்.
3. இயற்பியல் முறை
  • மண் வெப்பலூட்டம் : இது மண்ணில் உள்ள நோய்கள், களைகள், நூற்புழுக்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும். மண்ணின் மேற்பரப்பில் நெகிழி தான்களை கொண்டு மூடாக்கு செய்வதனால், சூரிய ஒளி நெகிழித் தாள்களின் வழியாக ஊடுறுவி மண்ணை வெப்பமடையச் செய்கிறது.
பின்பற்ற வேண்டியவை
  • தோட்டத்தினை 30 செ.மீ. ஆழத்திற்கு உழவு செய்தல்
  • நீர்ப்பாய்ச்சுதல்
  • தோட்டத்தின் மேற்பரப்பை 0.04/0.06 மி.லி. மீட்டர் தடிமனுள்ள நெகிழி தாள்களினால் மூடாக்கு செய்தல்
  • நெகிழி தாள்களின் விளிம்புகளை அனைத்து பக்கங்களிலும் மண் அணைத்து மூடுதல்
  • நெகிழி தாள்களை 10-15 நாட்களுக்கு பிரிக்காமல் விட்டுவிடுதல்.
4. ஓம்புயிர்த் தாவர எதிர்திறன்
  • தற்போது பயிரிடப்படும் மல்பெரி ரகங்களில் G-4 ரக வேரமுகல் நோய்க்கு மிதமான எதிர்திறன் கொண்டது.

Comments